நான் சமூக பணி படித்து முடித்து
(2019) தமிழக கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தில் சமூக நலவாழ்வு திட்டத்தில் சமூக பணியாளராக
இணைந்தேன். இந்த திட்டத்தில் நான் பணிசெய்ய வேண்டி இடங்கள் கருமாத்தூர், உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், முருகத்தூரான்பட்டி , தேனி மற்றும் வருசநாடு. ஒவ்வொரு இடங்களில் திட்டத்தின்  நலவாழ்வு பணியாளர் இருப்பார்கள். 
நான் பணிக்கு
சேர்ந்த உடன் நடத்திய முதல் நலவாழ்வு பணியாளர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது, அதில் ஒரு பணியாளர் என்னிடம் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார் , அது என்னவென்றால்
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பஞ்சாயத்துக்கு ( தாண்டிக்குடி செல்லும் வழி) உட்பட்ட பகுதியில் மின்சார வசதி கிடைக்காமல்  வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், அதனை கேட்டதும் ஒரு அதிர்ச்சி மேலும் அவர்களை பார்க்க வேண்டும் என ஆர்வத்தையும் தூண்டியது. நான் அந்த பணியாளரிடம் என்னால் முயன்ற முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தேன்.
அந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று நான் என்னுடைய இருசக்கர வாகனத்தில் முன்னும் பின்னும் தெரியாத சித்தரேவு கிராமத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றேன். ஆனால் அங்கு சென்றதும் அவர்களின் வீட்டை கண்டறிய மாலை 6 மணி ஆயிற்று. அபிராமி அவர்களின் அழகிய வீடு மலை அடிவாரத்தில் ஆட்டுக்குட்டி, கோழி மற்றும் நாய்க்குட்டி என வெளியில் பார்க்க அழகாக இருந்தது, ஆனால் அபிராமி அவர்களிடம் பேசி பார்த்தவுடன் தான் தெரிந்தது வெளிச்சத்திற்கு பின்னால் உள்ள பெரிய இருள் பகுதி உள்ளது என்று, அபிராமியின் கணவர் காட்டு பகுதியில் மரம் வெட்டும் தொழில் செய்துவந்தார், அவரை பார்த்தவுடன் கோப குணமுடையவர் என நினைத்து வந்தேன், ஆனால் பேசி பார்த்தவுடன் தான் தெரியவந்தது 100% வெளி உலகம் தெரியாத ,காணாத , எளிய மனிதர் என்று, அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் காட்டு வேலை, வீடு , மனைவி மற்றும் பிள்ளைகள் என இந்த உலகத்தை மட்டுமே கண்டவர், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர் பள்ளிக்கூடம் போகவில்லை என்றாலும் தன் மகன்களை பள்ளிக்கூடம் அனுப்பி வைக்கும் தந்தையாகவும், மனைவியின் மீது கோபத்தை காட்ட தெரிய காட்டான் என்று.
அபிராமி அவர்களிடம் நான் ஏன் மின்சார வசதி கிடைக்காமல் இருக்கிறது என்று கேட்டபோது அவர்கள் சொல்லியது , நாங்கள் காட்டு பகுதியில் வேலை பார்க்கும் போது நானும் என்னுடைய கணவர் லெட்சுமணனும் பழகி திருமணம் செய்துகொண்டோம், மேலும் காட்டுப்பகுதியில் கூரை கட்டி வாழ்ந்து வந்தோம். பிறகு குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தையின் கல்விக்காக , நாங்கள் மலை அடிவாரத்தில் ஒரு இடம் வாங்கி குடியேறினோம், பிறகு நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து என்னுடைய மகன்கள் பாதுகாப்பாக இருக்க சிமெண்ட் அட்டை போட்டு ஒரு அழகிய வீடு ஒன்றை 2005ம் ஆண்டு கட்டினோம் என்றும்.
அபிராமியின் வீட்டிற்கு மின்சாரம் வசதி கிடைக்காததால் ஏற்படும் பிரச்சனைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார் .அபிராமியின் வீடு மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளதால் பூச்சி தொல்லை அதிகம் உள்ளது எனவும் சமையல் செய்யும் போது உணவில் பூச்சிகள் விழுந்ததுவிடும் எனவும் இரவு நேரங்களில் குழந்தைகளை விஷ பூச்சிகள் கடித்து விடுவதாகவும் என்னிடம் கூறி வருந்தினார், மேலும் குழந்தைகள் மாலை வெளிச்சம் உள்ள போதே வீட்டு பாடத்தை செய்து முடித்து விடுவார்கள் அல்லது காலை வெளிச்சம் வந்தவுடன் படித்து விடுவார்கள் என்றும். மேலும் அருகில் நண்பர்களின் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிபெட்டியில் அபிராமியின் குழந்தைகள் படங்கள் பார்த்து கொண்டு இருக்கும் போது அருகில் உள்ளவர்கள் குழந்தைகளை உங்களுடைய வீட்டிற்கு செல்லுங்கள் என கடினமான மொழியில் பேசியவுடன் , அபிராமியிடம் குழந்தைகள் வீட்டில் வந்து அழுவார்களாம், இது தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருந்தது எனவும், குழந்தைகளின் நண்பர்கள் வீட்டில் இருக்கும் மின்விசிறியை பார்த்து வந்து ஏக்கத்தோடும் , ஆசையோடும் அம்மாவிடம் நம்ம வீட்டில் உள்ள மின்விசிறியை ஒரு நாள் இரவு போட்டு தூங்க வேண்டும் என கூறுவார்களாம். அதனை அபிராமி என்னிடம் சொல்லி அழுதார்கள்.
மேலும் நான் அபிராமியிடம் மின்சாரம் கிடைப்பதில் என்ன பிரச்சினை என கேட்டதும், அபிராமி சொன்ன பதில் அதிர்ச்சி அளித்தது, தாங்கள் பார்க்க இங்குள்ள மக்களை போல நாகரிகமாகவும், பணவசதி இல்லாத காரணத்தினாலும், மலையில் வாழ்ந்த வந்த காரணத்தினாலும் , மேலும் மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் அருகில் வசிக்கும் குடும்பங்கள் எங்களுக்கு மின்சாரம் கிடைக்க கூடாது என்று நினைத்தார்கள், மேலும் அருகில் வசிக்கும் குடும்பத்தின் உறவினர்கள் மின்சார அலுவலகத்தில் பணிபுரியும் காரணத்தினாலும் எங்களுக்கு மின்சார வசதி வழங்க மறுக்கிறார்கள் என சொல்லி அழுதார்கள்.
நான் அபிராமியிடம் இந்த பிரச்சினை சம்பந்தமாக நீங்கள் பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளிடம் சென்று மின்சார பிரச்சினை சம்பந்தமாக மனு கொடுத்திர்களா என நான் கேட்டதுக்கு அவர் கூறி பதில் அவுங்க யார் என்றும் அவுங்க எங்கு இருப்பாக என கூறினார், அதனை நான் கேட்டதும் எளிய மக்கள் யார் என இலக்கத்தை புத்தகம் சொல்லி தராத ஒரு அனுபவம் சொல்லி கொடுத்தது. நான் அவர்களிடம் கண்டிப்பாக மின்சாரம் வசதி கிடைக்க என்னால் முடிந்த முயற்சியை எடுப்பேன் என உறுதியளித்து இரவு 7 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டேன்.
சித்தரேவில் இருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் வத்தலகுண்டுடில் ஒரு தேனீர் கடையில் நின்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடினேன், அதில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் அவர்களின் கைப்பேசி எண் கிடைத்தது, அபிராமியின் மின்சார பிரச்சினையின் வீரியத்தை அறிந்து உடனே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியிரின் நேரடி உதவியாளர் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பிரச்சினை பற்றி கூறினேன், அவர் அனைத்தையும் கேட்டு நீங்கள் என்னிடம் நேரில் வந்து மனு அளிக்க வேண்டும் கூறி வைத்து விட்டார். மேலும் அப்போதே என்னுடைய ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு நிகழ்வை தெரியபடுத்தினேன் , அவரும் நிகழ்வை கேட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை நீங்கள் இன்று விடுமுறை எடுக்கவில்லையா என்று அதிர்ச்சியோடு கேட்டார். மேலும் நான் சித்தரேவில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் வாகனத்தில் பயணிக்கும் போது மூளைக்குள் பல்வேறு இராசயன மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருந்தது , அரசு அதிகாரிகள் மீது கோபம், எளிய மக்களின் வாழ்வியலை பார்க்கும் போது ஒருவகையான சிந்தனை மாற்றம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேண்டும் போராட வேண்டும் என ஆற்றல் பிறந்த தினம் அன்று
அந்த வாரத்தில் நாங்கள் அபிராமியை அழைத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் நிகழ்வை விளக்கி கூறி மின்சார பிரச்சினை சம்பந்தமாக மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் கண்டிப்பாக மின்சார பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார். இரண்டு வாரங்கள் கழிந்தது மேலும் விடாமல் மற்றொரு முறை அவரை சந்தித்து மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் அலுவலகத்தில் இருந்து சித்தரேவு உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு தொலைபேசியின் வாயிலாக மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்பேசினார்கள். சித்தரேவு உதவி பொறியாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் கூறியது அபிராமி வீட்டுக்கு மின்சாரம் வேண்டும் என்றால் அபிராமி வீட்டுக்கு அருகில் உள்ள தனியார்க்கு சொந்தமான இடத்தில் மின்சார கம்பி வைக்க வேண்டும் எனவும் மேலும் நிலத்தின் உரிமையாளர்கள் மின்சார கம்பி வைக்க அனுமதி தராத காரணத்தால் நாங்கள் அபிராமியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் சித்தரேவு கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக அபிராமியின் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார்.
மேலும் மறுநாள் நாங்கள் சித்தரேவு கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து பேசிய போது மின்சார பிரச்சினையை புரிந்து கொண்டு, அபிராமியின் வீட்டிற்கு அருகில அரசாங்கம் இடம் அல்லது பொது பாதை உள்ளதா என நில அளவர் வைத்து அளந்து பார்த்து கூறுகிறேன் என்றார். மேலும் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து முடித்த பிறகு ஒரு நம்பிக்கை பிறந்தது. மேலும் அபிராமியும் நாங்களும் சித்தரேவு உதவி பொறியாளரை சந்தித்து மின்சார பிரச்சினை சம்பந்தமாக விளக்கம் கேட்டதற்கு, சித்தரேவு உதவி பொறியாளர் அபிராமி வீட்டின் அருகில் உள்ள இடம் பொது பாதை அல்லது அரசாங்க இடமாக இருந்தால் தான் எங்களால் அபிராமியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்க முடியும் என்றார் மேலும் சித்தரேவு கிராம நிர்வாக அலுவலர் மின்சார கம்பி வைக்க எந்தவித வில்லங்கம் இல்லை என சான்று அளிக்க வேண்டும் என சித்தரேவு உதவி பொறியாளர் அபிராமியிடம் கூறினார்கள்.
நாட்கள் கடக்க கடக்க அபிராமி அவர்களுக்கு நேரடியாக கொலை மிரட்டல் அளித்தார்கள் அபிராமியின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், மேலும் அபிராமியிடம் அருகில் வசிப்பவர்கள் உன்னுடைய குழந்தை பள்ளி முடிந்து பிறகு வீடு திரும்பாது எனவும் கொலை செய்து விடுவோம் எனவும், உன்னுடைய கணவனை கொலை செய்து விடுவோம் எனவும் கொலை மிரட்டல் வந்தவாறு இருந்தார்கள். அபிராமி அவர்களுக்கு கொலை மிரட்டல் நடந்ததை என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார்கள்
மேலும் அபிராமி எங்களிடம் மின்சாரம் வசதி வேண்டாம் என்றும் , என்னுடைய குழந்தைகள் உயிரோடு இருந்தால் போதும் அண்ணே என சொல்லி அழுதார்கள். நான் அவர்களிடம் என்ன கூறுவது என தெரியவில்லை மேலும் இறுதியாக கூறியது போராட்டத்தின் நடுவே பிரச்சினைகள் உருவாகும் எனவும், நாம் அரசாங்கத்தின் மூலமாக போராடுவதால் நம்மோடு அரசாங்கம் நிற்கும், மேலும் எதுவும் கொலை மிரட்டல் , ஆபத்து நெருங்கினால் காவல் உதவி எண் 100 அழைத்து உதவி கேளுங்கள் என்று கூறினேன். மேலும் நானும் அபிராமி அவர்களுக்கு இப்படி ஒரு நெருக்கடி வரும் என நினைக்கவில்லை.
மாதங்கள் கடந்தது அரசு அலுவலகங்களை பற்றி தெரியாத அபிராமி, இப்போது தினந்தோறும் கிராம நிர்வாக அலுவலரையும் மற்றும் உதவி பொறியாளரையும்
சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார்.
2019 தீபாவளி பண்டிகை நெருங்கையில், அன்று காலையில் அபிராமி தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது, அந்த அழைப்பை எடுத்தவுடன் அபிராமி என்னிடம் ஆனந்த கண்ணீரில் பேச முடியாமல் அண்ணே மின்சார இணைப்பு வழங்க மின்சார துறையில் இருந்து மின்சார கம்பி கொண்டுவந்து இருக்காங்க அண்ணே என மகிழ்ச்சியாக கூறினார், மேலும் அபிராமியிடம் நான் மின்சாரம் வழங்கிய உடன் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினேன். அன்று மாலை அபிராமியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, அந்த அழைப்பில் அபிராமி என்னிடம் அண்ணே எங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருச்சு எனவும் அண்ணே எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க என கேட்டார். அதனை கேட்டதும் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி என் மேல் எனக்கே ஒரு மதிப்பு வந்தது. அன்று இரவு கடந்த வந்த பாதையை நினைத்து தூங்கிய தூக்கம் விலைமதிப்பற்றது.
எனக்கு ஒரு நிகழ்வை ஒலிப்பதிவு செய்து வைக்க வேண்டும் என ஆர்வம் மேலும் வருங்காலத்தில் மற்றவர்களுக்கு உதவ கூடும் என நினைத்து, நானும் ஒருங்கிணைப்பாளர் அவர்களும் சென்று ஒளிப்பதிவு செய்தோம்.
மேலும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போது திருமதி.அபிராமி அவர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக பேசுகையில் மின்சாரம் கிடைத்ததால் நாங்கள் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறோம் என்ற
அபிராமியின் வார்த்தைகளை கேட்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது.
இந்த ஒளிப்பதிவை நான் என்னுடைய வயது மூப்பில் மற்றவேலை செய்ய இயலாத காலங்களில் நான் எடுத்த இந்த காணொளியை பார்க்கும் போது நான் சேர்த்த வைத்து முதல் அசையா சொத்து இது தான் என்று நினைப்பேன், இதனை மனதிற்குல் நினைத்து நெகிழ்ந்து ,மற்றொருவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. பணத்தையும் பதவியையும் வைத்து மனிதர்களை எடை போடும் தற்கால சமூகம் அந்த பணத்தை வைத்து வாங்க முடியாதது ஒன்று என்னுடைய முதல் அசையா சொத்தும் , மற்றொன்று என்னுடைய மனநிறைவும் தான் என நினைத்து மகிழ்ச்சி கொள்வேன்.
குறிப்பு: இது ஒரு அனுபவ பகிர்வு மட்டுமே , மேலும் இந்த பதிவின் அனைத்து உரிமைகளும் தமிழக கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு
இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்
VRD 18 , பால் டிப்போ அருகில், தளவாய்புரம்
பதிவு எண்: BK4/3/2023
வரிவிலக்கு: 12A/80G
7402335113/8838814481
rjpmchc@gmail.com







👏👏👏
ReplyDeleteThank you sir
Delete