Skip to main content

தானம்(Donation)

 



நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் . என்னுடைய குடும்பத்தில் நாங்கள் நாள்வர் இருக்கிறோம் நான் என் அம்மா, அப்பா மற்றும் அண்ணன் இருக்கிறோம். என்னுடைய அப்பா வண்ணம் பூசும் தொழிலை செய்துவருகிறார்.

2017 ஆம் ‌ஆண்டு நான் முதுநிலை பட்டப்படிப்பை தொடங்கிய வருடம் அது. அன்றுதான் என் அம்மா திராத காய்ச்சல்,உடல் சோர்வு, உடல் வீக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அம்மா அருகில் இருக்கும் சிறு சிறு மருத்துவமனைகளுக்கு சென்று சோதித்த பிறகு. இரத்த சோகை என்று அம்மாவிடம் கூறினார்கள். இப்படியாக இரண்டு மாதங்களாக பார்த்தபோது உடல் உபாதைகள் தீவிரம் அடைந்தது தவிர சரியாகவில்லை. இதனை அறிந்த என் அம்மா அவரின் நண்பரும் இணைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதித்த பிறகு அவர்கள் அம்மாவை மூன்று நாட்கள் உள்நோயாளியாக இருந்து உடலை சோதிக்க வேண்டும் என்று அம்மாவிடம் கூறினார்கள். இச்செய்தியை அம்மா எங்களிடம் கூறினார். நாங்களும் சாதாரண உடல் பிரச்சினை என்று நினைத்து கொண்டு இருந்தோம்.

மறுநாள் நானும் அம்மாவும் மருத்துவமனைக்கு சென்றோம். நான் பிறந்த நாள் முதல் என் அம்மா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றது இல்லை. நானும் ஒரு தடவை கூட மருத்துவமனையில் தங்கி இருந்ததே இல்லை‌. அன்று தான் ‌முதல்முறையாக சென்றோம். மருத்துவமனையில் அம்மாவை அனுமதித்த பிறகு செவிலியர் ஒருவர் என்னை மட்டும் மருத்துவர் அழைக்கிறார் என்று கூறினார். பிறகு நான் மருத்துவரை சென்று பார்த்த உடன் அவர் என்னைபார்த்து உங்கள் அம்மாக்கு  பிரச்சினை என்னவென்றால்  சிறுநீரக செயலிழப்பு . எனவே நீங்கள் அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.  இன்னும் அவர் ஒரு சில வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என்று கூறினார்கள். 


அதனை கேட்டுத்தும் அம்மாவின் சிரிப்புடன் இருக்கும் முகத்தை நினைத்து ஓடிய கண்ணிர் துளிகள் துக்கத்தின் உச்சம்.  பிறகு என் முகத்தில் இருக்கும் துக்கத்தை மறைத்துகொண்டு அம்மாவின் முன் நின்றேன். அம்மாவின் முகத்தை பார்த்ததும் கண்ணிர்‌ கசிய தொடங்கியது. அக்கண்ணிரை கட்டுப்படுத்த முடியாமல் அந்த அறையில் இருந்து வெளியே வந்து மாடிப்படியின் அருகில் இருக்கும் ‌சன்னலில் வெளியே ‌வேடிக்கை பார்ப்பது போல், நடந்ததை ஏற்றுகொள்ள முடியாமல் கண்ணீர் சிந்திக்கொண்டு இருந்தேன்‌. ஆனால் அந்த வழியாக வருபவர்கள் என்னை பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அதன் காரணமாக நான் வெளியே சென்று என்னுடைய இருசக்கர ‌வாகனத்தை எடுத்துக்கொண்டு  கண்ணீர் வடிய வடிய வாகனத்தில் பல ஆட்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் பயணம் செய்தேன். பிறகு அம்மா தொலைபேசியில் என்னை அழைத்து ‌எங்கு இருக்கிறாய் இங்கு வா பொழுது போகவில்லை வாடா என்று கூப்பிட்டார். பிறகு நான் அம்மாவிடம் சென்று பேசிக்கொண்டுடே என்னுடைய கைப்பேசியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்த்துக்கொண்டு இருந்தார்‌. நான் வெளியில் சென்று செவிலியரை சந்தித்து மருத்துவரை பார்க்கவேண்டும் என்று கூறிக்கொண்டு மருத்துவரை சந்தித்து என் அம்மாவுக்கு இருக்கும் பிரச்சனையை அவர்களிடம் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். பிறகு நான் அம்மாவிடம் இது‌ சாதாரண இரத்தசோகை எனவும் கூறினேன்.    நான் மட்டுமே மருத்துவமனையில் அம்மாவுடன் இருந்து வந்தேன்.இரவு நேரத்தில் அம்மாவின் கட்டிலில் அடியில் தரையில் படுத்துக்கொண்டு அம்மாவுக்கு இப்படி ஆயிற்று‌ என்று ‌நினைத்து கண்ணீரின் வழியாக அம்மாவின் நினைவு அலைகள் சிந்தின. இப்படியாக மூன்று நாட்கள் சென்றது.. பிறகு ‌மருத்துவரின் ஆலோசனைகளையும் பரிந்துரைத்த மாத்திரைகளையும் பெற்றுக்கொண்டோம்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபோது அப்பா என்னிடம் மருத்துவர் என்ன சொன்னார் என்று கேட்டார். அதற்கு நான் மருத்துவர் கூறிய உண்மையை மறைத்து சாதாரண இரத்தசோகை என்று கூறினேன். நான் வீட்டில் இரவு முழுவதும் என் கண்ணீரால் தலையனைகளையும் போர்வைகளையும் நனைத்து வந்தேன்‌. பகல் ‌வேளையில் நண்பர் பணிபுரியும் மருத்துவமனையிலும் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தேன்.  இப்படியாக கண்ணீரில் நாட்கள் கசிந்தன. பிறகு இந்நோயை பற்றிய தகவல்களை இணையத்தில் ‌தினந்தோறும் தேட ஆரம்பித்தேன். அதன்படி சிறப்புமருத்துவமனைகளை இணையத்தின் வாயிலாக கண்டுயறிந்தேன். அந்த மருத்துவமனையில் என் நண்பரின் அம்மா வேலை செய்கிறார் எனவும் அங்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசம் என்று நான் அம்மாவிடம் சொல்லி அழைத்து சென்றேன். மருத்துவமனையில் அனைத்து ‌பரிசோதனைக்கும் அம்மாவுக்கு தெரியாமல், ‌என்னுடைய சேமிப்பின் மொத்த தொகையை செலுத்தினேன். பிறகு பரிசோதனைகள் முடிந்ததும் மருத்துவரை சந்தித்தோம். அவர்  ‌உண்மையை போட்டு உடைத்துவிட்டார். இதனை கேட்டு அம்மா அதிர்ந்து போனார். நான் மருத்துவரிடம் இதனை சரிசெய்ய என்ன செய்யவேண்டும் ‌என்று கேட்டேன். அதற்கு அவர் ‌தற்காலிக சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு எனவும் நீண்ட காலத்தீர்வு மாற்றுசிறுநீரக அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள். இதற்கு அனைத்தும் பணம் அதிகமாக செலவு ஆகும் எனவும் கூறினார்கள். நானும் அம்மாவும் மருத்துவமனையைவிட்டு வெளியில் வருகையில் படத்தில் நடப்பது போல் வானம் ‌இருட்டியது , அப்படியே அம்மாவை அழைத்து வீட்டில் இறக்கிகொண்டு‌.எனக்கு தெரிந்த அண்ணனிடம் நடந்ததை கூறிய அவரின்‌ இருசக்கர ‌வாகனத்தை எடுத்துக்கொண்டு என் அம்மாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் அம்மாவின் ‌சிந்தனைகளை  கலங்கிய கண்களில் ஏந்தி பயணம் செய்தேன். 


அங்கு சென்று பாட்டி மாமாவிடம் நடந்ததை சொல்லி அழுதேன். பின்பு உயிர்காக்க‌ அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் பணம் கேட்டேன். அதற்கு ‌அவர்களும் அழுதுகொண்டே காட்டையும் மேட்டையும் விற்றாள் தான் பணம் என்று கூறினார்கள். பிறகு வெளியில் இருக்கும் இருசக்கர ‌வாகனத்தை கவனித்து நடு இரவில் ஏன் இப்படி வந்துருக்க என்று திட்டினார்கள். அடுத்த நாள் என் நெருங்கிய அண்ணன் மதுரையில் இருந்துவந்து என்னை அழைத்து சென்றார். 

அதன்பிறகு எங்கள் வீடு  சிரிப்பு சத்தமின்றி சோகத்துடன் காணப்பட்டது. ஆனால் என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் ‌என்னிடம் பொதுவாக உங்கள் வீட்டில் மட்டும் எப்போதும் சிரிப்பு‌ சத்தம்  கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பார்கள். அதுக்கு ‌நான் சொல்லும் பதிலானது அம்மாவும் அப்பாவும் இருவரும் ‌ஒருவருக்கு ஒருவர் கிண்டல் செய்து சிரிப்பார்கள் என்று  நண்பரின் சொல்வேன். அன்று அந்த பழைய நினைவுதான் ‌மனதுக்கு வந்தது. அதன்பிறகு அம்மா வீட்டில் இல்லாதபோது அப்பா என்னிடம் அம்மாவை காப்பாற்ற முடியுமா என்று ‌அப்பாவின்‌ குரலில் இருந்து ‌கேட்டபோது‌ நான் அப்பாவிடம் முதல்முறையாக ‌கலங்கி நின்றேன். ஏனென்றால் நான் ‌பிறந்தது‌ முதல் அப்பா‌ என்னை கோபமாக திட்டியதும் அடித்ததும் இல்லை. இப்படிப்பட்ட மனுசன் கேட்டபோது மனசு வலி தாங்கமுடியவில்லை.


நான் கல்லூரியில் படிக்கும் போது பகுதிநேர‌ வேலையாக திருமண மண்டபங்களில் உணவு பரிமாறவும்‌ மேடை அலாங்கார வேலைக்கு செல்வேன் . அதுபோல எனக்கு கோவில், தேவாலயங்கள் மற்றும் மசுதிக்கு போகும் பழக்கம் கிடையாது ‌இயல்பாக ,ஆனால் இந்நிகழ்வுக்கு பிறகுதான் செல்ல ஆரம்பித்தேன். பிறகு நான் இரவு நேரத்தில் அம்மாவிடம் நான் வேலைக்கு செல்வதாக பொய்யான காரணத்தை‌‌ சொல்லி கொண்டு வாடிப்பட்டி மாதாகோவிலுக்கு சென்று இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிய இரவு முழுவதும் அங்குதான் தூங்கி வந்தேன். பிறகு அதிகாலையில் தான் வீடு திரும்புவேன். இப்படியாக‌‌ ஒருவாரம் செய்தேன். பின்பு காலையில் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அழகர்கோவிலுக்கு சென்று  வேண்டியதும் ,அங்கிருந்து வாடிப்பட்டி   கோவிலுக்கு சென்று  வேண்டியதும், அங்கிருந்து கோரிப்பாளையம் மசுதியிலும்  வேண்டிவந்தேன். 


இப்படியாக கடவுள்களின் மேல் நம்பிக்கையும் பிராத்தனைகளையும் வைக்க தொடங்கினேன். 

அதன்பிறகு நான் ஒரு தெளிவான முடிவினை எடுத்தேன். அம்மா உயிரோடு இருக்கும் வரை அம்மாவை மகிழ்ச்சியாக வைத்து இருப்பது என்று முடிவுக்கு வந்தேன். பிறகு நானும் அம்மாவும் நிறைய புதிய  படத்திற்கு புதிய திரையரங்குக்கும் மற்றும் மதுரையில் உள்ள கோவில்களுக்கும் அழைத்துச்சென்றேன். இது அனைத்தும் அம்மாவின் துக்கத்தை குறைத்தது. என் அம்மாவின்‌ நம்பிக்கை எல்லை கடந்து அவரின் உடல்நலம் சரியாகிவிட்டது எனறு நினைத்தாள்‌. அதன் விளைவு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக நோய் குணமாகிவிட்டது என்று எண்ணினாள். நானும் பலமுறை சொல்லி பார்த்தேன் சிறிதளவு கூட பொருட்படுத்தவில்லை. அதன் விளைவு வாந்தி மற்றும் கடுமையான தலைவலி. இதனை பார்த்தபோது கண்டிப்பாக இரத்த சுத்திகரிப்பு ‌சிகிச்சைக்கு போக‌ வேண்டியிருக்கும் என்று எண்ணி அதற்கான மருத்துவமனையை இணையத்தில் தேடினேன். அப்படியாக ஒரு சிறப்பு சிறுநீரக மருத்துவமனையை கண்டறிந்தேன். பின்பு நேரில் சென்று மருத்துவமனையின் முகப்பில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் இரத்த‌சுத்திகரிப்பு‌ செய்யப்படும் என ஒட்டிருப்பதை கண்டு‌ மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு அடுத்த நாளன்று அம்மாவை சிறப்பு சிறுநீரக மருத்துமனைக்கு அழைத்து சென்று மருத்துவரை பார்த்தபோது உடனடியாக இரத்த‌சுத்திகரிப்பு  சிகிச்சை தொடங்கவேண்டும் என்று கூறினார். பின்பு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக தற்காலிகமாக கழுத்தில் அறுவை சிகிச்சை ‌செய்து இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை தொடங்கினார்கள். 


இச்சிகிச்சை வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்ய வேண்டும் என்றார்கள். அம்மாவுக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை‌ செய்ய நான்கு மணிநேரம் ஆகும். அந்த மருத்துவமனையில் இரத்த சுத்திகரிப்பை மூன்று வேளைகளில் செய்வார்கள். அதன்படி காலை , மதியம் , மாலை இருந்தது. அண்ணன் மதியம் கல்லூரி சென்று இரவுதான் வருவான் நான் காலையில் கல்லூரிக்கு சென்று மதியம் ‌வந்திருவேன். அதன்காரணமாக மாலை வேளையில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேர்ந்து எடுத்தோம். எனக்கு கல்லூரி நிறைவடைந்ததும் அம்மாவை அழைத்து செல்வேன். பிறகு சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவமனையில்  நான்கில் இருந்து ஐந்து மணிநேரம் காத்திருக்கும் போது  நாற்காலியில் அமர்ந்து கற்றபாடம் எண்ணற்றவை.

கல்லூரியில் என்னுடன் பயிலும் நெருங்கிய ‌இரு நண்பர்களின் அம்மாவிற்கும் சிறுநீரக செயலிழப்பின் காரணமாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையை பல வருடங்களாக எடுப்பது தெரியவந்ததும் ‌அதிர்ச்சியாக இருந்தது. பின்பு என்னுடைய நண்பர்கள் தான் வழிகாட்டியாக இருந்தார்கள். ‌அப்போதே அவர்களிடன் ஏன் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்று கேட்டேன். அதில் ஒருவரிடம் அம்மாவும் பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால் செய்யவில்லை ‌எனவும் மற்றொருவர் அதனை பற்றிய தெரியவில்லை ‌என்று கூறினார்கள். என் நெருங்கிய ‌நண்பர்கள் அடிக்கடி கல்லூரிக்கு விடுப்பு‌ எடுப்பார்கள் காரணம் அவர்களின் அம்மாக்கு இரத்த சுத்திகரிப்பு செய்வதால் அடிக்கடி மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்படும் என்பார்கள். அதனை கேட்டதும் மனதுக்குள் சிறிய பதற்றம் ஏற்பட்டது. என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கூறுவது அம்மாவை பத்திரமாக பாத்துகோடா என்பது தான். 

ஒரு நாள் மருத்துவமனையில் இரத்த சுத்திகரிப்பு முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, நான் அம்மாவிடம் அம்மா நம்ம‌ பேசாம கிட்னி ஆப்ரேஷன் பண்ணிடுவோம் என்றேன். அதற்கு ‌அம்மா யார் கொடுப்பார் என்று கேட்டாள். நான் அதற்கு வேற யாரு நான்தான் என்று சொன்னதும். இந்த உலகத்துல எந்த ஒரு‌ தாயும் தான் பெற்றேடுத்த‌ பிள்ளையோட கிட்னிய வாங்குவார்களா! அது‌ உலகத்துல மிக பெரிய பாவம். அப்படி ஒன்னும் நான்‌ உயிர் பிழைக்க தேவையில்லை.  பக்கத்துல இருக்குறவங்க பெற்ற மகனை வைத்து உயிர்பிழைக்க வேண்டுமா என்று என்னை காரி  முஞ்சில  துப்புவாங்க இப்படி உயிர்பிலைக்கனுமானு கேட்பாங்க, அதுமட்டுமில்ல நான் வாழ்ந்து முடித்தவள் என்னுயிர் இருந்தால் என்ன போனால் என்ன ,ஆனா நீ நல்லா இருக்கனும்  என்று கூறி பேசாம வண்டிய ஓட்டு இரவு சமையல் செய்யனும் என்றார். ஆனால் நான்‌ அம்மாவை விடுவதாக இல்லை. மருத்துவமனைக்கு செல்லும் போது எல்லாம் நான் விடாமல் மாற்று சிறுநீரக அறுவை ‌சிகிச்சை பற்றி அம்மாவிடம் சொல்லி கொண்டே இருப்பேன். ஆனால் அதனை ‌அவர் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் மருத்துவமனையில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையின் ஒருங்கிணைப்பாளர் ‌அவர்களிடம் அறுவை சிகிச்சை ஆகும் செலவுகளையும் பற்றியும் கேட்டு கொண்டு இருந்தேன். அவரிடம் ஒருநாள் என் அம்மாவிடம் அறுவை சிகிச்சை பற்றியும் தானம் கொடுப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஆகாது என்று ‌நீங்கள் அம்மாவுக்கு விழிப்புணர்வு ‌வழங்க வேண்டும் என அவரிடம் அறையின் முன்பாக நிற்பதை வழக்கமாக வைத்து ‌இருந்தேன். ஆனால் என்னை சிறுவர் என கருதி உன்னுடைய அப்பாவை வந்து என்னிடம் இதை பற்றி பேசசொல் என்றார். அடுத்த நாள் அப்பாவிடம் அதனை பற்றிய கூறியபோது  லூசு மாறி பேசாத என்று கூறினார். இப்படியாக தினந்தோறும் அம்மாவிடமும் அப்பாவிடமும் சொல்லிக்கொண்டே இருப்பேன். 

அதுமட்டுமின்றி இணையத்தில் சிறுநீரக மருத்துவர்கள் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றி விளக்கும் காணொளிகளை அம்மாவிடம் வற்புறுத்தி  காண்பித்து கொண்டே இருந்து வந்தேன். நான் அம்மாவிடம் நல்லா பாருக 18 வயது நிரம்பிய இரத்த உறவுகள் யாரு வேணாலும் அவர்களுடைய சிறுநீரகத்தை தானமாக கொடுக்கலாம். அதனால் எந்தவித உடல் பிரச்சினைகள் வராது என்று  கூறினேன்.ஆனால் அவர் பேசாம செல்போன் எடுத்துக்கொண்டு போ என்று வழக்கம் போல் சொல்லிவிட்டார். 

நான் வழக்கம்‌ போல் அம்மாவின் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததும் என்னுடைய நண்பர் தொலைபேசியில் தொடர்புகொண்டு டேய் நம்ம நண்பரின் அம்மா இறந்துவிட்டார் என்று கூறினார். அவர் யார் என்றால் நான் முன்பே கூறிய  இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையில் உள்ளவர். இதனை கேட்டதும் அதிர்ச்சி, வருத்தம், பயம் ‌இவை மூன்றும் ஒன்றாக ‌வந்தது. அன்று இரவில்  நண்பனின் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் ‌போது இறந்த அவர்களின் ‌கையில் உள்ள ஊசிகளின் தழும்புகளை பார்க்கையில் கண்கள் கலங்கியது  . ஏனென்றால் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யும் அனைவரின் கைகளிலும் அதே தழும்புகள் தான் ‌இருக்கும். அதுபோல இரத்த சுத்திகரிப்பு செய்யும் அம்மாகளை பார்க்கும் போது நம்முடைய அம்மா என நினைக்கும் மனரீதியான உணர்வு வரும். இந்த உணர்வுவை அனுபவித்தவர்களுக்கு  மட்டுமே இது புரியும். எனக்கு ஒரு புதிய பழக்கம் ஏற்பட்டது. அது நாம் படும் கஷ்டங்களை எவ்வளவு கணக்கானோர் படுவார்கள் என்று நினைப்பதுண்டு, அதன் காரணமாக நான் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் வழியாக செல்லும் போது  என்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனையின் நுழைவாயிலின் அருகில் இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்குள்ள உயிருக்கு போராடும் நோயாளிகளையும் அவரின் உடன் இருப்பவர்களின் உணர்வுகளை என்னுடைய கண்களால் உணர்ந்து விட்டு பிறகு அங்கு இருந்து நகர்ந்து சிறுநீரிகவியல் துறையை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்து. அங்கு சென்று  இரத்த சுத்திகரிப்பு பிரிவுக்கு வெளியில் நின்று சிகிச்சை முடிந்து வெளியில் வருவோர்களையும் அவர்கள் உடன் இருப்போர்களையும் என்னுடைய கண்கள் இமைக்காமல் பார்க்கும் காரணம் அவர்களின் வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் ஒன்றே என்று நினைத்து கொண்டு அங்கிருந்து கனத்த நெஞ்சோடு வெளியேறினேன். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது


இப்படியாக நாட்கள் கடந்தன, கல்லூரியில் இரண்டாம் ஆண்டுக்கு நகர்ந்து சென்றோம்.  அந்த ஆண்டு எங்களுக்கு புதிதாக ஒரு பேராசிரியர் வந்தார். அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய மாணவர்களுக்கு பிடித்த பேராசிரியர் அவரும் வகுப்பறையில் அவரின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு‌ இருந்தார். அப்போது ஒரு அதிர்ச்சியான செய்தினை சொன்னார். அது அவரின் அம்மாவும் பல ஆண்டுகளாக இரத்த சுத்திகரிப்பு செய்துவருகிறார் என்ற செய்திதான் ‌அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தோம். ஒரு வகுப்பறையில் இத்தனை நபர்களின் அம்மாக்கள் இச்சிகிச்சை பெறுவது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தந்தது.

மற்றொரு நாள் காலை வேளையில் எதிர்பாரத விதமாக ஒரு ‌அதிர்ச்சி செய்திவந்தது. இச்சிகிச்சை செய்யும் மற்றொரு நண்பரின் அம்மாவும் இறந்துவிட்டார் என்று செய்தி என்னுடைய அம்மாக்கு நேர்ந்தது போல் மனதுக்குள் துடித்துக்கொண்டு இருந்தது . அங்கு சென்று அவரின் உடலையும் குறிப்பாக கையில் ஊசிகளின் தழும்புகளை பார்க்கும்போது  அந்த நிலையில் என்னுடைய அம்மாவை நினைத்து மனம் சுருங்கியது . அவரின் அம்மா எப்படி ‌இறந்தார் என்று கேட்டபோது அவருக்கு இரத்த சுத்திகரிப்பு முடிந்து மறுநாள்  தலையில் பிரச்சினை காரணமாக மொட்டை அடித்து கொண்டு நண்பரிடம் நன்றாக பேசிவிட்டு தூங்கி விட்டார்கள் காலையில் எப்போது சீக்கிரமாக எழுந்து விடுவார்கள் அன்று எழும்பவில்லை அதனால் அவன் அம்மாவை எழுப்பியபோது எழும்பவில்லை இறுதியாக அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்டது என்று கூறினார்கள்.சிறிது நேரம் கழித்து அவ்விடத்திற்கு நான் முன்பே சொன்ன பேராசிரியர் வந்து அவரின் தாயாரை பார்த்த உடன் அவர் சத்தம் போட்டு அழுத அந்த அழுகை அங்கிருந்தவர்களையும் சேர்த்து அழுகசெய்தது. இறுதியாக இடுகாட்டில் நிலைவிய  அமைதி கொடுமையானது. என் மனதில் அடுத்து நான் இடுகாட்டிற்கு வரும் நேரம் மிகவும் அருகில் இருப்பதை உணர்ந்தேன்.

என்னுடைய நண்பரின் அம்மாவின் மரணம் பெரிய தாக்கத்தை ‌ஏற்படுத்தியது என்னுடைய அம்மா வழக்கமாக மதிய நேரத்திலும் இரவு நேரத்திலும் உறங்கும் பழக்கம் உண்டு. இவ்வாறக உறங்கும் வேளையில் அவருடைய மூச்சு காற்றின் சத்தத்தையும் வயிற்றின் அலைகளையும் பயத்துடன் கவனிக்க ஆரம்பித்தேன்‌. இந்த பயம் ஒருபடி மேலே சென்று இரவு நேரத்தில் என்னுடைய கைப்பேசியின் விளக்கை அம்மாவின் முகத்தை நோக்கியும் வயிற்றை நோக்கியும் எரிய செய்யும் நிகழ்வு நடக்க தொடங்கியது மற்றும் காலை வேளையில் எழுந்திருக்க தாமதமானால் அதே போல் பயத்துடன் கவனிக்க தொடங்கினேன்.

எனது பயத்தின் உச்சமாக பொது இடங்களில் நடக்கும் போது மின் கம்பத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அவரகால ஆம்புலன்ஸ் எண்களை குறிக்க தொடங்கினேன்.

நான் இரவு நேரத்தில் வீட்டிற்கு வருகையில் என்னுடைய இருசக்கர வாகனத்தில் எரிபொருள் இருப்பதை உறுதிசெய்ய தொடங்கினேன். காரணம் ‌நள்ளிரவில் அம்மாவிற்கு பிரச்சினை ஏற்பட்டால் அவரை மருத்துவமனை அழைத்து செல்வதற்காக இப்படியாக பயம் எல்லைகளை கடந்து சென்றது.
மற்றொரு நாள் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது .அது‌ என்னவென்றால் நான் பேசும் போது அம்மா கேட்காமல் இருக்க காரணம் அம்மா என்னை அவர் பேச்சை கேட்கும் குழந்தையாக நினைப்பது தான் .

 நான் படிக்கும் கல்லூரியில் துறை பேராசிரியர்கள் என்னிடம் நன்கு பேசுவார்கள்.  எனவே அவர்களை அம்மாவிடம் பேசவைத்தால் அம்மாவை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்துவிடலாம் என்று ஆசையில் கல்லூரி முடிந்தவுடன் நண்பர்களுக்கு யாருக்கும் தெரியாமல் அவர்களை சந்தித்து அவர்களின் நடந்ததை சொல்லி நீங்கள் என் அம்மாக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றி தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் என்று உதவி கேட்டேன். ஆனால் பேராசிரியர்களின் வேலை சுமை அதிகரித்த‌ காரணத்தால் அவர்களால் அம்மாவிடம் பேசமுடியவில்லை. அதேபோல் என்னுடைய உறவினர்களும் மற்றவர்களும் நான் கூறுவதை பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இவ்வுலகம் உயிர்களை வயது பொருந்திய உடலாக பார்த்தது. ஆனால் நான் அம்மாவை வயதான உடலாக பார்க்கவில்லை மாறாக என்னை நேசிக்கும் உயிராக பார்த்தேன்.

அம்மா அதிக நாட்களாக சிகிச்சை மேற்கொள்ளுவதால் அவருக்கு சக‌ நோயாளிகள் நண்பர்கள் ஆனார்கள் மேலும் இச்சிகிச்சை செய்யும் நோயாளிகளின் எண்ணிக்கை மாதம் மாதம்  குறைய தொடங்கின.  காரணம் சிகிச்சை பலனின்றி ஏற்படும் மரணங்கள். 
இந்த நிகழ்வு அம்மாவின் மனநிலையை பாதிக்க தொடங்கின. ஒரு வாரம் சிகிச்சைக்கு வந்தவர்கள் மறுவாரம் வரமாட்டார்கள். இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்பவர்கள் அனைவருக்கும் மரணத்திற்கு ‌அருகில் பயணிப்பவர்களே ‌.இந்த வலியும் வேதனையும் கண்முன்னே உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

அன்று தீபாவளிக்கு ‌முந்திய நாள் ‌அம்மாவை சிகிச்சை முடிந்த கையோடு தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க அம்மாவை அழைத்து சென்றேன். அம்மா எப்போதும் இல்லாத மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுவதற்கு ஆர்வமாக பொருட்களை ‌வாங்கி கொண்டு வீடு திரும்பினோம். அன்று ‌இரவு மகிழ்ச்சியாக எங்களுடன் பேசி கொண்டு இருந்தார். பிறகு தீபாவளி அன்று காலை 6 மணியளவில் அம்மா  எழுந்து ‌உட்காந்து இரும்பிகொண்டு இருந்தார் . நான் அம்மாவின் என்னசெய்யுதுனு கேட்டப அதுலாம் ஒன்னும் இல்ல என்று சொன்னார். அப்படியே அம்மா பாரத்துட்டு இருக்கும் ‌போது கழிப்பறைக்கு  போயி வாந்தி எடுத்து கொண்டு கழிப்பறையை விட்டு ‌வெளியில் வேகமாக ஓடிவந்து மூச்சு விடமுடியாமல் ஓடிவந்தார். அம்மா  மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடியாதை பார்த்தும் வேகமாக என்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று ஆட்டோவை அழைத்துவந்தேன். ஆனால் அம்மாவால் நிற்க கூட முடியவில்லை. எனவே அப்பா அம்மாவை தூக்கி ஆட்டோவில் ஏறினார். நானும் இருசக்கர வாகனத்தை எடுத்து அட்டோவிற்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள செவிலியர்களிடம் சொன்னதும் அவர்கள் தயார்நிலையில் இருந்தனர். அம்மா மருத்துவமனைக்கு வந்தவுடன் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து கொண்டு இருந்தார்கள் , அப்போது அவர் முச்சு விடமுடியாமல் கதறிய சத்தம் மருத்துவமனையின் வாசல் வரை கேட்டது. மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளின் கண்கள்  அனைத்தும் அவசர சிகிச்சை பிரிவின் திசையில் தான். மருத்துவமனையின்  ஊழியர் எங்களிடம் அம்மா இக்கட்டான நிலையில் இருக்கிறார் எனவும் தற்போது நிலையில் வெண்டிலேட்டர் மூலமாக தான் இருக்கிறார் என கூறியதும் இருசக்கர வாகனத்தை எடுத்து மேலூர் பைப்பாஸ் ரோட்டிக்கு சென்று வண்டியை நிறுத்தி என் மனதுக்குள் அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். இன்று தான் அம்மா என்ற வார்த்தையையும் உறவும் கண்முன்னே காணமால் போய்விடுமா என்றும் நினைத்து கொண்டு இருந்தேன். பிறகு மருத்துவமனைக்கு சென்று அப்பாவுடன் காத்து இருப்போர் அறையில் உட்கார்ந்து இருக்கும் போது என்னுடைய முதுகின் பின்புறம்‌ ஒருவர் கைவைத்து கூப்பிட்டார் . அது யார் என்று திரும்பி பார்த்தால் அது என்னுடைய நண்பர் சிரித்த முகத்தோடு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கூறி வீட்டில் செய்த பலகாரங்களை கொடுத்தார். அதிர்ச்சியோடு எப்படி நான் இங்க இருக்கேன்னு தெரியும் என்று கேட்டதுக்கு உன்னோட வீடு பூட்டி இருந்தது.    நீ எப்படியாவது மருத்துவமனையில் தான்  இருப்ப என்று நம்பிக்கையோட வந்தேன் என்று கூறியதும் உண்மையான ‌ஆனந்த கண்ணீரை உணர்ந்த தருணம் அன்று இரவில் வானம் முழுவதும் வானவேடிக்கையும் வெடியோசையும் தான் அதனை மருத்துவமனையின் சன்னல் கண்ணாடியின் வழியாக பார்த்தபோது நான் நினைத்தது என்னைப்போல தீபாவளியை யாரும் கொண்டாடி இருக்க முடியாது என்ற எண்ணம் தான் வந்தது . மறுநாள் அம்மாவின் உடல்நிலை சரியாக உள்ளது மாலையில் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறினார்கள்.

நாங்கள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றதும். மறுபடியும் விழிப்புணர்வு பதிவை வற்புறுத்தி காண்பித்தேன் . இப்படியாக நான் அம்மாவை தொடர்ந்து இரண்டு வருடங்களாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக என்னுடைய அம்மா சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தார் அப்பாவிடமும் வற்புறுத்தி சம்மதம் வாங்கிய மகிழ்ச்சியோடு மறு நாள் மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்யிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் காரணம் என்னுடைய அம்மா சம்மதம்.  பின்பு மருத்துவரை பார்த்து மாற்று சிறுநீரக ‌அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதும். அவர் யார் தானம் கொடுப்பது என்று கேட்டார் அம்மா அதற்கு என்னுடைய மகன் என்று கூறியதும் மருத்துவர் நல்ல முடிவு என்று கூறினார்.உடனே அதற்கான பரிசோதனைகளையும் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவதற்கு விரைவாக ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். அடுத்தபடியாக அறுவை சிகிச்சையின் ஒருங்கிணைப்பாளர் எங்களிடம் கூறியது அறுவை சிகிச்சை வெறும் 6 மணி நேரம் தான் ஆனால் அதனை செய்ய சாரசரியாக 6 மாத காலங்கள் எடுக்கும். காரணம் மருத்துவமனைக்கும் அரசு அலுவலகங்களுக்கும் நடக்க வேண்டி இருக்கும். மேலும் இந்த 6 மாதங்கள் அம்மாவிற்கு முக்கியமான காலகட்டம் எந்தவித உடல்நல பிரச்சினைகள் வந்துவிர‌கூடாது எனவும் கவனமாக இருக்க வேண்டிய ‌காலங்கள் என்று கூறினார். மேலும் எனக்கும் ‌சில கட்டுபாடுகளை விதித்தார்கள்‌. அது‌ அறுவை சிகிச்சை பிறகு‌ துரித உணவுகளையும் , அசைவ சாப்பாடுகளையும் , புகைப்பழக்கத்தையும் , மது அருந்தும் பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் தவிர்க்க வேண்டும் என்பது தான். எனக்கு அதுக்கு முன்வரை அதன் மேல் பிரியம் இல்லை. ஆனால் ஒருங்கிணைப்பாளர் சொன்னதற்கு பிறகு தான் ஒரு மிக பெரிய‌ ஏக்கம் ஏற்பட்டது. காரணம் இவை மூன்றையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்காமல் போய்விடுமோ என்று எண்ணம் வந்தது. எனவே நான் யாருக்கும் தெரியாமல் துரித உணவையும், புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் இறுதியாக சுவைத்து பார்த்தேன் .

2018 டிசம்பர் முதல்வாரம் நான் என்னுடைய உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தொடங்கினேன். 


அறுவை சிகிச்சையின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் தினந்தோறும் என்னை வந்து பார்க்க வேண்டும் ‌மேலும் தலைமுடியில் இருந்து கால்நகம் வரை பல்வேறு பரிசோதனை செய்து ஒவ்வொரு பரிசோதனை முடிவுகளை அதற்கான மருத்துவரிடம் ஒப்புதல் பெறவேண்டும். மேலும் அரசு வருவாய் துறையில் வேலை செய்யும் பல்வேறு அதிகாரிகளிடம் மருத்தும் சார்ந்த ஒப்புதல் சான்றுகளை வாங்கவேண்டும் என்று கூறினார்கள். அன்று கல்லூரிக்கும் , மருத்துவமனைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் தனிஒருவனாக ஓடிய ஓட்டம் என்னுடைய கால்களுக்கு மட்டுமே தெரியும்.

இக்காலகட்டத்தில் நான் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம் குறிப்பாக ‌சமூகம் நாங்கள் எடுத்து முடிவை ஏற்றுகொள்ளவில்லை. எங்களுக்கு ஊக்கம் அளித்தவர்களைவிட எதிர்மறையான எண்ணங்களை புகுத்தியவர்களே அதிகம். இந்த சமுகத்தை தனித்து நின்று எதிர்கொண்டது மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.

குறிப்பாக என்னுடன் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே உண்மையான காரணத்தை பேராசிரியர்களிடம் கூறினேன். அவர்களில் பல பேராசிரியர் எனக்கு மனதளவில் பெரிய நம்பிக்கையை கொடுத்து கல்லூரி படிப்பை முடிக்க உதவினார்கள். ஆனால் ஒருசில பேராசிரியர்கள் ஏற்படுத்திய‌ மன காயங்கள் இன்னும் ஆராத வடுவாக இருக்கிறது. எனவே இவ்வாறான வார்த்தைகளில் காயப்படுவதை தவிர்க்க கல்லூரி படிப்பை நிறுத்தி முடிவுசெய்த போது தடுத்து நிறுத்தியதும் பெண் பேராசிரியர்கள் தான் மற்றொரு அம்மாக்களின் முகங்கள்.

எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் சமுகபணி படித்து பட்டம் பெற்ற பேராசிரியர் ஒரு சாதாரண‌ மாணவனின் மனதை புரிந்து கொள்ளமுடியவில்லை மற்றும் ஆயுதங்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது இன்றளவும் ஏற்றுகொள்ள முடியவில்லை.

நான் மாலையில் ‌மருத்துவமனையில் பரிசோதனைகள் முடித்தும் கல்லூரி ‌நண்பர்கள் தங்கி இருந்த அறையில் தான் அவர்களுடன் உணவுண்டு கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்து வந்தேன்.

இப்படியாக 2019 ஏப்ரல் மாதம் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து அரசின் ஒப்புதலை பெற்றோம். மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு தயார என்று கேட்டதற்கு என்னுடைய கல்லூரி ‌தேர்வினை எழுதிய பிறகு வைத்து கொள்ளலாம் என்று கூறினேன். பிறகு கல்லூரி தேர்வினை முடித்த கையுடன் மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சை செய்வதற்கு நான் குழந்தை துள்ளிக்குதித்து விளையாடுவதை போல் மருத்துவமனைக்கு சென்றேன்.
மே 1 நாள் ‌மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது . என்னுடைய நண்பர்கள் அனைவரும் அறுவை சிகிச்சைக்கு முந்திய நாள் என்னிடம் நாங்கள் இருக்கிறோம் என்று  கூறினார்கள். அம்மா அன்று இரவு தான் என்னிடம் ‌டேய் எனக்கு பயமாக இருக்கு உனக்கு எப்படி ‌இருக்கு என கேட்டதும் சிரிப்பால் பதில் கூறினேன். மே 1 நாள் அதிகாலை 3 மணிக்கு எழுந்து அறுவை சிகிச்சைக்கு தயாராகினேன்.காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்து சென்றதும். அங்கு இரண்டு செவிலியர்கள் டேய் பயப்பட வேண்டாம் என்று சொல்லி மூக்கின் வழியாக மயக்க மருந்தை செலுத்தினார்கள் , 


அவ்வளவு தான் ‌பிறகு மாலை 5 மணிக்கு தான் மயக்கம் தெரிந்தது , அப்போது செவிலியர் ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இது அவசர சிகிச்சை பிரிவு எனவும் உங்கள் அம்மாவும் நலமாக இருக்கிறார் என்ற‌ செய்தி கேட்டதும் , இவ்வுலகில் வாழும்  750 கோடியில் நபர்களில் நான் கண்ட மகிழ்ச்சியை வேறுயாரும் பெற்று இருக்கமுடியாது. 22 வருடங்களுக்கு முன்பு வயிற்றில் இருந்து வெளியேறிய இரத்தமும் சதையும் மறுபடியும் அவரின் வயிற்றுகே சென்ற தருணம். அறுவை சிகிச்சையின் போது தொப்புள் கொடியில் இருந்து முதுகெலும்பு வரை போடப்பட்ட கீறல்களை பார்க்கையில் முதல்முறையாக வலிகள் அனைத்து சுகமாக தெரிந்தது. 

மருத்துவமனையில் பத்து நாட்கள் கழித்து நலம் பெற்று வீடு திரும்புவதற்கு முன்னாள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த என்னுடைய அம்மாவை பார்க்க அழைத்துச் சென்றார்கள் . அந்த அறையில் சென்று கதவை திறந்த பார்க்கையில் இவ்வுலகம் எவ்வளவு அழகானது என்று‌ தோன்றியது

சிறுநீரக தானம் பொதுவாக அம்மா மகனுக்கும் , கணவர் மனைவிக்கும் கொடுப்பது சாதாரண நிகழ்வு ஆனால் 22 வயது மகன்  அம்மாவுக்கு கொடுப்பது  இதுவே முதல் முறையாகும். இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தந்தது. 

ஒரு உயிர் இவ்வுலகில் வாழ வாய்ப்பு இருக்கையில் அதனை செய்யாமல் இருப்பது அவரை கொல்வதற்கு சமம். உயிரோடு இருக்கையில் உடல் உறுப்பை தானம் கொடுப்பவர்கள். நிஜ வாழ்க்கையில் சொர்க்கத்தை காண்பவர்கள்.

உண்மையில் வாழ்கையின் ஒரு முடிவு அனைத்தையும் மாற்றிவிடாது.மாறாக முடிவும் முயற்சியும் தான் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.

 தற்போது வீட்டில் மகிழ்ச்சி ஒலி கேட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த பெரிய போராட்டத்தில் என்னுடன் துணை நின்றது என்னுடைய சமூக பணி படிப்பின் போது ‌நான் பெற்ற அனுபவங்களும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளரும் தான். 

உயிரை காக்கும் போராட்டத்தில் எங்களை இந்த சமூகம் ஏற்றுகொள்ள மறுத்தது. எங்களை ஒதுக்கியது ஆனாலும் சமூகம் ஏற்படுத்திய தடைகளை உடைத்து போராட்டத்தில் வெற்றி கண்டோம்.

சிறுநீரகம் தானம் இரண்டு வழிகளில் பெறலாம். ஒன்று மூளைச்சாவு அடைவந்தர்களின் சிறுநீரகத்தை பெறலாம் . ஆனால் இந்த முறையில் காத்து இருப்போர் பட்டியலில் 1000க்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.எனவே தானம் பெறுவர்கள் பெரும்பாலும் கடைசிவரை காத்து இருந்து உயிரை விடுகிறார்கள். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு சிறந்த வழி இரத்த உறவுகள் அவர்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுப்பது. இதில் இரத்தபந்தம் என்பதால் இரத்தவகையும் திசுகளின் பொருத்தம் சிறப்பாக இருப்பதால்  சிகிச்சையில் நல்ல பயனை பெறலாம் . இந்த உலகில் ஒருவர் நலமுடன் வாழ ஒரு சிறுநீரகமே போதுமானது. குறிப்பிட்ட சதவீதம் மக்கள் இவ்வுலகில் பிறக்கையில் ஒரு சிறுநீகத்துடன் தான் பிறக்கிறார்கள். சிறுநீரகத்தை தானமாக கொடுப்பவர்களின் சாரசரி அயுட்காலமும் சாதாரண மனிதனின் சாரசரி அயுட்காலமும் ஒன்றே. எனவே 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுப்பதால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிருப்பிக்கபட்டுள்ளது. எனவே தானம் கொடுப்பவர்கள் எந்த பயமும் இன்றி சிறுநீரகத்தை கொடுக்கலாம் மற்றும் தானம் பெறுவர்களும் எந்தவித குற்றவுணர்ச்சி இன்றி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ளலாம். நம் சமுதாயத்தில் ‌இருக்கும் பழைய போலியான கட்டமைப்பையும் மூடநம்பிக்கைகளையும்  உடைத்து எறிந்து . இளைய தலைமுறையினர் அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்.

1/5/2020 இன்று என் அம்மாவுக்கு வயது ஒன்று.


தொடர்புக்கு  

இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்

VRD 18 , பால் டிப்போ அருகில், தளவாய்புரம்

பதிவு எண்: BK4/3/2023

வரிவிலக்கு: 12A/80G

7402335113/8838814481

rjpmchc@gmail.com



Comments

Popular posts from this blog

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டு வரப்பட்ட திட்டம். ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்(AB-PMJAY), மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ( CMCHIS) ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது இத்திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (மே 2023) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். உயர் அறுவை சிகிச்சைகளான காது நுண் நரம்பியல் அறுவை சிகிச்சை( காக்ளியர் இம்ப்ளான்ட் ) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்ல...

மலைகிராமும் மின்சாரமும்

                              நான் சமூக பணி படித்து முடித்து ( 2019 ) தமிழக கத்தோலிக்க நலவாழ்வு சங்கத்தில் சமூக நலவாழ்வு திட்டத்தில் சமூக பணியாளராக இணைந்தேன் . இந்த திட்டத்தில் நான் பணிசெய்ய வேண்டி இடங்கள் கருமாத்தூர், உசிலம்பட்டி , விக்கிரமங்கலம், முருகத்தூரான்பட்டி , தேனி மற்றும் வருசநாடு. ஒவ்வொரு இடங்களில் திட்டத்தின்   நலவாழ்வு பணியாளர் இருப்பார்கள் . நான் பணிக்கு சேர்ந்த உடன் நடத்திய முதல் நலவாழ்வு பணியாளர் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது , அதில் ஒரு பணியாளர் என்னிடம் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார் , அது என்னவென்றால் திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பஞ்சாயத்துக்கு ( தாண்டிக்குடி செல்லும் வழி) உட்பட்ட பகுதியில் மின்சார   வசதி கிடைக்காமல்   வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், அதனை கேட்டதும் ஒரு அதிர்ச்சி மேலும் அவர்களை பார்க்க வேண்டும் என ஆர்வத்தையும் தூண்டியது. நான் அந்த பணியாளரிடம் என்னால் முயன்ற முயற்சி எடுப்...

எளிய மனிதர்கள் - 1

கட்டிட வேலை செய்யும் முதியவர் ஒவ்வொரு முறையும் செங்கல்களை தன் தலைமேல் தூக்கி கொண்டு நடக்கும் போது அவருடைய காய்த்த கைகளும் தளர்ந்த கால்களும் செய்தி ஒன்றை கடத்துகிறது   எளிய மனிதர்களின்‌ வாழ்வாதாரம் உடல் உழைப்பு என்பதை உணர்த்துகிறது மேலும் உழைக்க தயங்கும் நமக்கு முதியவர் தன்னுடைய உழைப்பால் பாடத்தை கற்பிக்கின்றார் தொடர்புக்கு   இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம் தளவாய்புரம்  7402335113/8838814481